×

மாங்கல்ய பலம் தரும் `தாலிப் பவளம்’

பவளத்தின் இயல்பு

செவ்வாய்க்கு உரிய ரத்தினம் செம்பவளம். இது ஓர் கடல் வாழ் உயிரினம். குழியுடலி வகையைச் சேர்ந்தது. இதனுடைய கால்கள் சல்லி வேர்களை போல நூற்றுக்கணக்கில் இருக்கும். கடலில் உள்ள உப்புச்சத்தை சுண்ணாம்பு சத்தை உறிஞ்சி வளரும் பவளப் பூச்சி. இந்த பூச்சி கால்சியம் கார்பனேட் நிறைந்த ஓர் உயிரினம் ஆகும். பவளத்தை கொண்டு தயாரிக்கப்படும் `பவளபஸ்பம்’ சித்த மருத்துவத்தில் `சுவாசகாசம்’ என்று அழைக்கப்படும் நுரையீரல் கோளாறுகளுக்கும், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் (டி.பி) தீர்க்கவும், எலும்பைப் பலப்படுத்தவும் பயன்படுகிறது.

ராஜராஜனின் கட்டளை

பவளத்தால் ஆபரணங்கள் செய்து அணிவது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எகிப்து நாட்டிலும் கிரேக்க நாட்டிலும்கூட பவள அணிகலன்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்தன. ராஜராஜ சோழன் காலத்தில் அனைவரும் பவளம் அணிய வேண்டும் என்று ஓர் உத்தரவிட்டார். அதனால், பெண்கள் தாலிகளில் பவளம் கோர்த்தனர். மாங்கல்ய பலம் தரும் பவளத்திற்கு `தாலிப் பவளம்’ என்பர். திருமணத் தடை நீக்கும் செம்பவளம், ஜாதகங்களில் தாலிபாக்கியம் குறைந்தவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் பவளத்தை அணிவதால் இக்குறைகள் நீங்கப் பெறுவர்.

மேஷமும் சிவப்புப் பவளமும்

மேஷ ராசியினர் மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட ரத்தினமாக பவளம் விளங்குகிறது. ஏனென்றால் இந்த ராசிக்குரிய கிரகம் செவ்வாய். மார்ஸ் (Mars) எனப்படும் இந்த கிரகம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனை தங்களின் கண்களால் பார்த்து அறிந்து, அக்காலத்தில் சித்தர்கள் சிவப்பு நிறத்தை மேஷத்திற்கு வரையறுத்திஉள்ளனர். நாமும் நம் கண்களால் இக்கிரகத்தைப் பார்க்கலாம். சிவப்பில் ஒளி வீசும்.

விருச்சிக ராசியும், செம்பவளமும்

மேஷ ராசியை போலவே விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்திற்கும் அதிபதியாக செவ்வாய் விளங்குவதால், அந்த ராசி லக்னத்துக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட ரத்தினமாக பவளம் விளங்குகிறது.

செம்பாம்பும் செம்பவளமும்

செவ்வாயோடு தொடர்புடைய கேது நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பவளமே அதிர்ஷ்ட ரத்தினம் ஆகும். ஏனென்றால் கேதுவை செம்பாம்பு என்று அழைப்பார்கள். கேது திசை, கேது புக்தி நடப்பவர்கள் பவளம் அணியலாம். ஜாதகத்தில் கேது பலவீனமாக இருந்தால், வலுக் குறைந்து இருந்தால் அவர்கள் பவளத்தில் மோதிரம் செய்து அணியலாம். கழுத்தில் பவள மாலை அணியலாம். பவளம் அணிவதால் கேதுவால் ஏற்படும் மன அழுத்தம், உயிர் பயம், நம்பிக்கை வறட்சி ஆகியன குறையும். தடை தாமதங்கள் உண்டாகும். இதை போக்க, செம்பவளம் உதவும்.

சிவப்பின் ஒளி மஞ்சள்

பவளம் சிவப்பு நிறமாக இருந்தாலும், அது மஞ்சள் நிற கதிர்களை உமிழும். இக்கதிர்கள் உஷ்ணத்தை குறைக்கும். முப்பட்டை உடைய கண்ணாடிப் பெட்டிக்குள் பவளத்தை வைத்தால், சுற்றிலும் மஞ்சள் நிற கதிர்களை நாம் காணலாம்.

வெப்புநோய் தீர்க்கும் பவளம்

பொதுவாகவே, பவளம் அணிவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்குதல் குறையும். பவளம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் மூச்சிரைப்பு, இளைப்பு, இருமல், சளி, ஆஸ்துமா, ரத்தக் கசிவு, கண் எரிச்சல், கண் சிவத்தல் மற்றும் விஷப் பூச்சிகளால் பாதிப்பு, தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிப்பு அடைந்தோர் பவளம் வாங்கி அணிவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். பவளம் அணிவோருக்கு உடலில் விஷம் தங்காது முறித்துவிடும்.

யார் யார் பவளம் அணியக்கூடாது

மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பவளம் அணியக் கூடாது. செவ்வாய் ஜாதகத்தில், ஆறு, எட்டு, பன்னிரண்டில் இருந்தால் தக்க ஆலோசனைகளைப் பெற்றுதான் பவளம் அணிய வேண்டும்.

யார் யார் பவளம் அணியலாம்

மகரம், மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்கள் பவளம் அணியலாம். கேது திசை, செவ்வாய் திசை நடப்போர் அணியலாம். செவ்வாய் ஜாதகத்தில், வர்கோத்தமமாக இருந்தால், அதாவது ராசியிலும் அம்சத்திலும் ஒரே ராசியில் இருந்தால், அவர்கள் பவளம் அணிவது உத்தம பலனைத் தரும். ராசியில் நீசமாகவும், அம்சத்தில் உச்சமாகவும் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகக்காரர்களும் பவளம் அணிவதால் நல்ல பலன்களை பெறுவார்கள்.

ஒன்பதாம் எண்ணும் பவளமும்

ஒன்பதாம் எண்ணுக்குரியவர்கள் பவளம் அணியலாம். ஒன்பதாம் எண் அல்லது 9,18,27 – ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் பவளம் அணிவதால் அவர்களுக்கு நோய் தாக்குதல் குறைந்து ஆரோக்கியம் மேம்படும். ஒன்பதாம் எண்ணுக்குரிய அதிர்ஷ்ட ரத்தினம் பவளம் ஆகும்.

இலக்கியத்தில் பவளம்

தமிழ் இலக்கியங்களில் பவளத்தை பெண்களின் சிவந்த வாய்க்கும், இறைவனின் உதட்டுக்கும், நகத்துக்கும் உதாரணமாக எடுத்துரைத்தனர். `பவளவாய் கமலச் செங்கண்’ என்று அரங்கத்துப் பெருமாளை, ஆழ்வார் வர்ணித்தார். கம்பர், ராமனின் 20 விரல் நகங்களையும், பவளத் துண்டுகள் என்று சுந்தரகாண்டத்தில் வர்ணித்தார். ஆண்டாள், `கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று அரங்கனின் தித்திக்கும் வாயின் சிவப்பை பவளத்திற்கு உவமையாக்குகிறார்.

வியாபாரிகளுக்கு பவளம்

பீட்ரூட், ரோஜாப்பூ, செந்தாமரை, கனகாம்பரம், கூரை ஓடுகள் போன்ற சிவப்பு நிறப் பொருட்களை வியாபாரம் செய்பவர் பவளம் அணியலாம்.

தாம்பத்திய சுகமளிக்கும் பவளம்

பெண்கள் பவளம் அணிவதால், பல நன்மைகளை அடைவார்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு, திருமணம் நடைபெற உதவும். திருமண வாழ்வில் தாம்பத்தியமும் அன்னியோன்யமும் ஏற்பட பவளம் உதவும்.

தோஷம் இல்லாத பவளம்

பவளத்தைத் தெரிவு செய்யும்போது, நல்ல ஒரு ஜெம்மாலஸ்டிடம் சென்று பவளத்தை வாங்க வேண்டும். ஏனெனில் தோஷம் உள்ள பவளம் நற்பலன்களைத் தருவதற்கு பதிலாக, தீய பலன்களைத் தந்துவிடும். அப்போது, அந்த பவளத்தை அணிந்திருப்பவருக்கு பயமும் பதட்டமும் தோன்றும். எந்த வேலையும் செய்ய மனத் துணிவு ஏற்படாது. எல்லோரையும் சந்தேகப்பட்ட படி பயந்து கொண்டே இருப்பார். ஒரு வேலையைத் தொடங்கினால் அது சீக்கிரம் முடியாது.

அரைகுறையாக நின்றுவிடும் என்ற அச்சம் அவர் மனதுக்குள் தோன்றி கொண்டே இருக்கும். மேலும், துளை உள்ள பவளம், அரிப்பு ஏற்பட்ட பவளம், கோணலான பவளம் போன்றவற்றை வாங்கி அணியக் கூடாது. அப்படி அணிந்தால், அவர்களுக்கு மூச்சுத் திணறல், இதய நோய், இதயப் படபடப்பு போன்றவை ஏற்படும். கை – கால்களில் நடுக்கம் ஏற்படும். எனவே, நல்ல ஒரு ரத்னசாஸ்திரம் தெரிந்த மனிதரிடம் கலந்து ஆலோசித்து, தோஷம் இல்லாத பவளத்தை வாங்கி அணிய வேண்டும்.

தொகுப்பு: பிரபா எஸ். ராஜேஷ்

The post மாங்கல்ய பலம் தரும் `தாலிப் பவளம்’ appeared first on Dinakaran.

Tags : Mars ,Dinakaran ,
× RELATED உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை